Sunday 30 September 2012

மொபைல் போன்



ஒரு அண்ட் ராய்ட் மொபைல் போன் ஆருயிர் நண்பனுக்கு சமம்.

நவீன மொபைல் போன் ஒரு ஆடம்பர பொருள்.  நமக்கு வயதாகிவிட்டது, இனி தேவையில்லை என்றுதான் நினைத்தேன். ஆனால் நான் காணும் சந்திக்கும் அனைத்து மக்களிடமும் நீக்கமற நிறைந்திருப்பது இந்த போன் ஒன்று தான்.;  எனவே என் சிந்தனையை அதன் பக்கம் செலுத்தினேன்.  அப்படி அதில் என்னதான் இருக்கிறது என்று துருவி துருவி என் பேரனிடம் கேட்டேன். அவன் “தாத்தா இதெல்லாம் உங்களுக்கு புரியாது” என்று ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டான். 

எனக்கு சுருக் என்றது. இதை இனி விடக்கூடாது என்று என் சிந்தனையை ஓடவிட்டதில் கிடைத்த அனுபவம்தான் இப்போது நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வது. பேசுவதற்கு கண்டுபிடித்த போன் இன்று பேசாமலேயே எல்லா வேலைகளையும் செய்யும் அளவுக்கு வந்து விட்டது, வளர்ந்தும் விட்டது.

வயதானவர்களுக்கு வழிகாட்டியாக, வரி கட்டும் கருவியாக, வங்கி கணக்கின் கண்ணாடியாக, உலக செய்திகளையும் உள்ளூர் செய்திகளையும் உள்ளங்கையில் அள்ளி தெளிப்பது அழகான அண்ட் ராய்ட் போன்.  ஆயிரக்கணக்கான பாடல்களும், மனம் கவர்ந்த திரை படங்களும் நினைத்த நேரத்தில் கேட்கலாம், பார்க்கலாம்.  பாடலுடன் கூடிய காட்சிகளையும் படுத்துக்கொண்டே பார்க்கலாம். நீங்கள் தூங்கியவுடன் அதுவும் தூங்கிவிடும்.  உங்கள் வாய் மொழி கட்டளைகளை தன் சிரமேற் கொண்டு சலிக்காமல் செயல்படும்.  இந்த போன் இன்னும் என்னவெல்லாம் உங்களுக்கு செய்யும் என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் அசந்து போவீர்கள்.

அழகான குரலில் உங்கள் பெயரை சொல்லி “நான் உங்களுக்கு என்ன செய்யவேண்டும்?” என்று அந்த போன் கேட்பதிலேயே நீங்கள் மனம் நெகிழ்ந்து போவீர்கள்.  சென்னையில் உங்கள் நண்பர் வீட்டுக்கு செல்ல அந்த போனிடம் முகவரியை சொல்லி சில பட்டன்களை தட்டி அதன் சொல் படி நடந்தால் அவர் வீட்டு வாசலிலேயே உங்களை கொண்டுபோய் விட்டுவிடும். 
  
ஒருவேளை நீங்கள் போகும் வழியில் காணாமல் போய்விட்டாலும் கூட உங்கள் இருப்பிடத்தை உடனே காண்பித்துவிடும் உங்கள் பிள்ளைகளுக்கு.  உங்கள் வங்கி கணக்கில் காசு இல்லாவிட்டால், நல்ல நண்பர்கள் உதவியுடல் நொடிபொழுதில் உங்கள் கணக்கில் பணத்தை வரவைக்கும்.  ஆயிரம் காலத்து புகைபடங்களைகூட அழகுபடுத்தி குடும்ப ஆல்பமாக அவ்வப்போது கண்டு மகிழலாம்.  

 எந்த வகை பிரயாணம் ஆனாலும் உங்கள் போனில் முன் பதிவு செய்யலாம்.  உங்கள் பிள்ளைகளின் பிறந்த நாள், நட்சத்திரம் அனைத்தையும் பதிவு செய்து அவ்வப்போது வாழ்த்துக்கள் அனுப்பலாம்.  தனிமை என்னும் கொடிய வேதனையை போக்கும் அருமருந்தாக கையாழலாம் .  காணக்கிடைக்காத அருமையான கார்ட்டூன் படங்கள், கற்பனைக்கெட்டாத விளையாட்டுக்களை கண்டு மகிழலாம்.  கவலைகளை மறக்க சிறந்த கருவி இந்த போன்.  பள்ளிகூட பாடங்களைகூட பதிந்துவைத்து படிக்க சொல்லலாம். இன்னும் எத்தனையோ நல்ல பல உபயோகங்கள் இருந்தும் அதையெல்லாம் விட்டு விட்டு இன்னும் ரோட்டில் செல் போனில் பேசிக்கொண்டே போய் விபத்துக்களில் மாட்டி கொள்கிறார்கள் இளைஞர்கள். காதலர்களை சேர்த்து வைப்பதும் பிரிப்பதும் இந்த செல் போன்.  என்னைபோன்ற வயதானவர்களுக்கு இந்த போன் ஒரு சிறந்த நண்பன்.  மிகவும் சிக்கனமாக இருந்து சில ஆயிரங்களை சேமித்து ஒரு போன் வாங்கினேன்.  இப்போது எனக்கு நேரம் போவதே தெரியவில்லை.  உலக நடப்புகளை இந்த போன் மூலம் சில நாட்களில் தெரிந்து கொண்டேன்.  தெரிந்து கொண்டோம் என்ற திருப்தி இருப்பதால் செலவு பெரிதாக தெரியவில்லை.

நவீன உலகின் அற்புத கண்டுபிடிப்பு இந்த செல் போன்.  வசதி உள்ளவர்கள் ஒரு நல்ல அண்ட் ராய்ட் போன் வாங்கி படித்து கொள்வது நல்லது.

நான் வாங்கியிருப்பது SAMSUNG GALAXY Y GT S5360. விலை ரூ.7000/-

No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...