Friday 19 September 2014

மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள உதவுங்கள்.


கடைசி நேரத்தில் இந்த ஆறுதல்தான் தேவை


மரணத்தை மகிழ்ச்சியுடன் ஏற்று கொள்ள உதவுங்கள்.

     வயதானவர்கள் தன்னிடம் அன்பாக இருபவர்களை விட்டுவிட்டு தன்னை எதிர்கொள்ளும் மரணத்தை ஏற்றுகொள்ள தயாராக இருக்கிறார்கள்.

     வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்தவர்கள் மரணத்தைக்கண்டு அஞ்சுவதில்லை.  மரணம் என்பது இயற்கையாக நடக்கும் ஒரு நிகழ்வு என்பதை முற்றிலும் உணர்ந்தவர்கள் இவர்கள்.

     நம்மில் பலர் சாகும் தருவாயில் உள்ளவரை எப்பாடுபட்டாவது, எவ்வளவு செலவு செய்தாவது பிழைக்க வைத்து விடவேண்டும் என்று தவறான ஒரு முயற்சியை செய்கிறோம்.  சில நேரங்களில் இதனால் பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் மிகுந்த கஷ்டமும் மன உளைச்சலும் உண்டாகிறது.

     இதுபோன்ற பல நேரங்களில் நல்ல மருந்தையும், மருத்துவரையும் விட மரண படுக்கையில் இருப்பவரிடம் அன்பாக பேசி அவருக்கு துணையாக இருப்பதுதான் சிறந்தது என்பதை மறந்து விடுகிறோம்.  எந்த நிலையிலும் நீங்கள் அவருடன் இருந்து சந்தோசத்தையும் துக்கத்தையும் பகிர்ந்துகொண்டு அவர் பிரிவதையும் ஏற்றுகொள்ளும் மனப்பக்குவம் அடைவது மருந்தைவிட சிறந்தது.

     பெரும்பாலும்  தீராத நோயினால் பாதிக்கப்பட்ட வயதானவர்கள் மருத்துவமனையில் இருப்பதைவிட தன் வீட்டிலேயே தன்னை நேசிப்பவர்கள் நடுவிலேயே இருக்க விரும்புவார்கள்.  அவருடைய இந்த விருப்பத்தை நிறைவேற்றுவதன்மூலம் அவருடைய மரணம் விரைவாக நிகழலாம்.  இதனால் தவறில்லை.அவருடைய உணர்சிகளுக்கு ஏற்றாற்போல் நடந்துகொள்வதுதான் நல்லது.  சில முதியவர்கள் தனக்கு ஏற்படும் மருத்துவ செலவுகளை நினைத்து நோயின்பால் அடையும் வேதனையைவிட மனவேதனை அதிகம் அடைவதுண்டு. எனவே இவர்களின் விருப்பத்திற்கேற்ப நடப்பதே சிறந்தது.

     மரண படுக்கையில் இருப்பவர்களின் கண்கள் கடைசி நேரத்தில் தன் அன்புக்கினியவர்களை காண ஏங்கும். இவர்கள் அவர்  முன் தோன்றி உண்மை நிலையை அன்பாக எடுத்து கூறி தன் கண்ணீரை காண்பித்தால் அமைதியாக உயிர் பிரியும்.  மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் யாரும் இல்லா  அனாதையாக உயிர் பிரிவதைவிட இதுபோன்ற அன்பானவர்கள் புடைசூழ கண்ணீர் மல்க உயிர் பிரிவது ஆயிரம் மடங்கு உயர்ந்தது.  மனித உயிர்கள் பிரியும்போது இதைத்தான் விரும்புகிறது என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்.
தன்னிடம் போதிய வசதி இருக்கிறது என்ற காரணத்தினால் பிரியும் உயிரை மருத்துவ மனையில் தீவிர சிகிச்சை பிரிவில் தனிமையில் இயந்திரங்களின் மத்தியில் விட்டுவிட்டு கண்ணாடி வழியாக பார்ப்பது மாபெரும் கொடுமை என்பதை குறைந்தது பெற்ற பிள்ளைகளாவது உணரவேண்டும்.

     நம் எல்லோரையும் மரணம் ஒருநாள் கவ்வபோகிறது என்பது யாவரும் அறிந்த உண்மை.  இருந்த போதிலும் நம் கண் முன்னால் வேறு ஒரு முதியவர் மரணத்தை சந்திக்க நேரிடும்போது அவருக்கு ஆறுதலாக அருகில் இருப்பதுதான் சிறந்த சேவை என்பதை நினைவில்  கொண்டு ஒவ்வொருவரும் வாழ்வது சிறந்தது.

     ஒரு மனிதனின் முழுமையான மரணம் என்பது தன் இல்லத்திலேயே தன் குடும்பத்தினர் புடைசூழ அனைவரும் கண்ணீர் மல்க விடை பெறுவதுதான்.  எத்தனை பேருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்.

     என் நண்பர் ஒருவர் தன் ஆருயிர் மனைவியை மருத்துவ மனையில் ICU  வில் விட்டுவிட்டு மருந்து வாங்க சென்ற நேரத்தில் அவரை தேடி அவர் மனைவியின் உயிர் பிரிந்ததை நினைத்து தினமும் அழுதுகொண்டு இருக்கிறார்.  யாராலும் அவருக்கு ஆறுதல் சொல்ல முடியவில்லை.  இன்னொரு நண்பர்  மருத்துவ மனையில் ICU விலிருந்து  தன் மனைவியின் உயிர் பிரிந்த உடலை பார்த்து அவர்  வாயிலுள்ள பற்களை எங்கே என்று கேட்டு கதறி அழுதார்.  காரணம் அவர்  உயிர் பிரிந்த பின் வாயினுள் வெண்டிலேடர்  குழாயை  செலுத்த முரட்டுத்தனமாக முயற்சி செய்த மருத்துவர்களால் அவர்  பற்கள் உடைந்திருக்கிறது என்பது தெரியவந்தது.  தீராத மனக்கவலையுடன் நடமாடும் என் நண்பருக்கு நான் எப்படி ஆறுதல் சொல்வதென்று இன்றும் சிந்திக்கிறேன். 
பாசம் நிறைந்தவர்கள் வீட்டில் ஒரு முதியவர் மரணம் நிகழ்வது பெருமை.  மாறாக மருத்துவ மனையில் நிகழ்வது மாபெரும் கொடுமை.

     உயிரோடிருக்கும்போது கண்டுகொள்ளாமல் இருந்துவிட்டு உயிர் பிரிந்தபின் ஓடோடி சென்று விலை உயர்ந்த மாலை அணிவித்து மரியாதையை செய்வது கௌரவம் என நினைக்கிறார்கள் நம்மில் பலர்.

நன்றி : திருமதி.Dr.C.சத்திய மாலா அவர்கள் எழுதிய “Where there is no Doctor” என்ற புத்தகத்திலிருந்து  

1 comment:

  1. Very true sir I experienced with my parents and grandparents.

    ReplyDelete

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...