Tuesday 4 November 2014

CDA சர்குலர் 527 dated 25.4.2014 காலம் கடந்து வந்திருக்கும் சுற்றறிக்கை



 
Will this government take any action ?
CDA  சர்குலர் 527 dated 25.4.2014
காலம் கடந்து வந்திருக்கும் சுற்றறிக்கை

நாட்டை காக்கும் பணியில் சேர்ந்து போரில் உயிர் நீத்தால்தான் அவர் குடும்பத்துக்கு ஏதாவது கிடைக்கும்.  அல்லாமல் குண்டடி பட்டு குற்றுயிரும் குலைஉயிருமாக  திரும்பினால் அவர்களைபோல் பாவம் செய்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

கார்கில் போரில் லெப்டினென்ட் சௌரப் காலியா வுடன் சிறைபிடிக்கப்பட்ட நமது ராணுவ வீரர்களின் கதி என்ன ஆனது என்பது இந்த நாடே அறியும்.  நமது வீரர்கள் ஐந்து பேரை சித்ரவதை செய்து அடையாளம் காணமுடியாதபடி உடலை ஒப்படைத்த பாகிஸ்தான் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்திய அரசு.  கடந்த பதின்மூன்று ஆண்டுகளாக நீதி கேட்டு அலைகிறார் அவர் தந்தை டாக்டர் காலியா. பாகிஸ்தானை போர் குற்றம் புரிந்த நாடாக உலக நீதிமன்றத்தில் நிறுத்த இந்திய அரசால் முடியவில்லை.  அரசுக்கு நம் மீது அக்கறை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.  1971 போரில் சுமார் ஒரு லட்சம் பாகிஸ்தான் படை வீரர்களை சரணடைய வைத்து ராஜ மரியாதையுடன் விடுவித்த இந்திய அரசும்,  இந்திய  ராணுவமும் நமது   வீரர்கள் 57 பேர்களை பாகிஸ்தான் சிறைகளில் இருந்து இன்று வரை விடுவிக்க முடிய வில்லை.  நமது நிர்வாக சீகேடுக்கும், திறமையில்லாத ஆட்சிக்கும் இது ஒரு உதாரணம்.  நமது தலைவர்கள் வாய் கிழிய பேசினால் மட்டும் போதாது.  செயலில் காட்டவேண்டும்.  நமது ராணுவம் பாகிஸ்தானிடம் தோல்வியுற்றால் என்ன ஆகும் என்பதை எண்ணி பார்க்கவேண்டும்.

ஊனமுற்ற படை வீரர்களின் பென்சனை நிர்ணயிப்பதில் பல முரண்பாடுகள் உள்ளது.  சாதாரண படை வீரர்களுக்கு இது சம்பந்தமாக உதவி செய்ய நல்ல அமைப்புகள் தேவையான அளவு இல்லாததால், இதை பயன் படுத்தி ஈவு இரக்கமில்லாத ராணுவ அமைச்சகம் இழைத்த அநீதிகள் எண்ணிலடங்கா.  துதரிஷ்ட வசமாக இதை எதிர்த்து போராட வழியில்லாமல், வாயில்லா பூச்சிகளாக  மடிந்தவர்கள் ஏராளம்.

“உனது இயலாமை 20% க்கு குறைவாகவும் சர்விஸ் பத்து வருடம்   இல்லாததாலும் உனக்கு ஒரு பென்சனும் கிடையாது” என்று 1.3.1968 க்கு முன்னர் பல ஊனமுற்ற வீரர்கள் ஈவு இரக்கமின்றி வெளியேற்றபட்டனர்.  பின்னர் 1.3.68 முதல் 1.1.73 வரை ஐந்து வருட சர்விஸ் இல்லாமல் ஊனமுற்றவர்களுக்கு  ஒன்றும் இல்லை என்றது அரசு.  குறிப்பிட்ட தேதியை காட்டி பல வீரர்களின் வாழ்க்கையை இளமையிலேயே சோகமக்கியது இந்த அரசு.  இதே நிலைமை ஒரு சிவிலியனுக்கு ஏற்பட்டும் பட்சத்தில்  அவர்களுக்கு 60 வயது வரை பாதுகாப்பான பணி வழங்கி பின்னர் பென்சனும் வழங்கபடுகிறது.  இந்த சட்டம் ராணுவ வீரர்களுக்கு பொருந்தாது என கூறிவிட்டது அரசு.  ஆனால் இன்று ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி காலத்தில் ஏதேனும் காயம் ஏற்பட்டு வெளி வர நேர்ந்தால் இவர்களுக்கு பென்சன் மற்றும் அனைத்து சலுகைகளும் கிடைக்கிறது என்பது ஒரு ஆறுதலான செய்தி.  பாதிக்கப்பட்ட அனைவரும் இன்று நம்மை விட கஷ்ட மான சூழ்நிலையில் ராணுவ பணி செய்த நம் மூத்த குடிமக்கள்.  இவர்களை ஏமாற்றும் இந்த அரசு அதிகாரிகளுக்கு கடவுள் நிச்சயம் ..........

1.3.68 இல் மறுக்கப்பட்ட பென்சன் தற்போது 46 ஆண்டுகள் கழித்து வழங்கப்படும் என்று கூறுகிறது CDA  சர்குலர் 527. ஒருவேளை அவர்கள் உயிரோடு இல்லாவிட்டால் அவர் மனைவிக்கு குடும்ப பென்சன் வழங்கப்படும் என்கிறது இந்த சுற்றறிக்கை.  இந்த ஆணையை வெளியிடுவதில் நமது ஜனாதிபதி மிகவும் மகிழ்ச்சி அடைவதாக கூறுகிறது அந்த சர்குலர். என்ன கொடுமை இது ?

1.3.68 இல் 30 வயதானவர் இன்று உயிரோடிருந்தால் அவர் வயது 76 க்கு மேல் இருக்கும்.  ஒரு ராணுவ வீரனுக்கு  46  வருடமாக கொடுக்க முடியாது என கூறி வந்த அரசு அவன் சாகும் தருவாயில் இந்த சர்குலர் விடுவதில் யாருக்கு என்ன பயன்.?

இந்த சுற்றறிக்கையை பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணம் துளி அளவிலும் அரசுக்கு இருக்குமானால், இந்த நாடெங்கிலும் உள்ள பல ராணுவத்தினர் நல சங்கங்களுக்கு அல்லவா இதை அனுப்பியிருக்க வேண்டும்.  நீங்கள் இந்த சுற்றறிக்கையை நன்கு கவனித்தால்,  இதை பெறுபவர்களின் பட்டியலில் சுமார் ஐம்பது பேருக்கு மேல் உள்ளது.  அதில் ஒரு அங்கீகரிக்கப்பட்ட சங்கத்தின் பெயர் கூட இல்லை.  தகவல் பெரும் உரிமை சட்டத்தின் மூலம்தான் நாம் பெறவேண்டும் என்ற அவல நிலை உள்ளது.

கடந்த 30 வருடங்களாக ராணுவ பென்சனர்களுக்கு தொடர்ந்து பல விதத்தில் சேவை செய்து வந்த நாங்கள், அந்தந்த சமயங்களில் 20% க்கு குறைவாக இயலாமை அடைந்தவர்கள் பென்சன் கேட்டு எங்களிடம் வந்தபோது உங்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை என்று கூறி விட்டோம்.  அவர்கள் பெயர் முகவரிகூட நாங்கள் எழுதி வைக்காமல் விட்டுவிட்டோம் என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.  அவர்கள் இப்போது இருக்கிறார்களா இல்லையா, இருந்தால் எங்கு இருக்கிறார்கள், இல்லாவிட்டால் அவர்கள் மனைவி எங்கு இருக்கிறார்கள் என்ற விபரம் தேடி அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசில் பணியாற்றி இறந்து போன முன்னாள் படை வீரர்களின் விதவைகளுக்கு இரண்டாவது குடும்ப பென்சன் வழங்க தமிழக அரசின் ஆணைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.  எத்தனையோ விண்ணப்பங்கள் அனுப்பியும் எந்த செயல்பாடும் இல்லை.

கான்டீன் மூலமும், முன்னாள் ராணுவத்தினர் நல உதவி இயக்குனர் மூலமும் யாரவது இருப்பார்களா என்று தேடி வருகிறோம்.  உங்களுக்கு தெரிந்தவர்கள் யாரேனும் இருந்தால் தெரிவிக்கவும். கண்ணை கெடுத்த பின் சூரிய நமஸ்காரம் செய்ய சொல்வதுபோல் இருக்கிறது நமது அரசின் செயல்பாடுகள்.  வேலையில்லா கொடுமையால் ராணுவத்தில் சேரும் நிலை மாறி நாட்டை பாதுகாக்க ஒவ்வொரு இந்தியனும்  கட்டாய ராணுவ சேவை செய்யவேண்டும் என்ற நிலை வந்தால் தான் இந்த நிலை மாறும்.




No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...