Sunday, 21 September 2014

இயலாமை பென்சனும் சர்வீஸ் பென்சனும்





இயலாமை பென்சனும் சர்வீஸ் பென்சனும்

இதுபற்றி சமீபத்தில் வந்த அரசாணை

(12(28)/2010-D (Pen/Pol) Government of India, Ministry of Defence, Department of Ex-servicemen Welfare, New Delhi dated 10th February 2014)

காலம் கடந்து வெளியிடப்படும் இந்த அரசாணையின் சாராம்சம் இதோ:-

ஒரு படை வீரர் இயலாமை நிமித்தம் தானாக பணிவிலகி வந்தால் (Discharged on own request) இயலாமை பென்சன்  கிடைக்காது.  அவரது பணிக்கால அடிப்படையில்  சர்விஸ் பென்சன் மட்டும் வழங்கப்படும்.  குறித்த காலத்திற்கு முன்னதாக இயலாமை நிமித்தம் பணியிலிருந்து விடுவிக்கபட்டால் அவருடைய பென்சன் இரண்டு வகையாக பிரித்து வழங்கப்படும்.

1.     அவருடைய பணிக்காலஅடிப்படையில் சர்வீஸ் பென்சனும் ..(Service Element)
2.     இயலாமை சதவீத அடிப்படையில் (Disability Percentage) இயலாமை பென்சனும் சேர்த்து வழங்கப்படும். (Disability Element)

01.03.1968 க்கு முன்னதாக இந்த இயலாமை சதவீதம் 20 க்கு குறைந்து 10  வருடம் சர்வீஸ் இருக்கும் பட்சத்தில் இயலாமை பென்சன் நிறுத்தப்பட்டு சர்வீஸ் பென்சன் மட்டும் வழங்கப்பட்டு வந்தது.

01.03.1968 க்கு பின்னர் 5 வருட சர்வீஸ் முடித்தவர்களுக்கு இயலாமை சதவீதம் 20  க்கு குறைந்த போதிலும் சர்வீஸ் பென்சன் வழங்க பட்டது.

பின்னர் 01.01.1973 க்கு பின்னர் குறைந்த பட்ச சர்வீஸ்  எதுவும் இல்லாமல் 20 சதவீதத்திற்கு குறைவாக இயலாமை அடைந்தவர்களுக்கு சர்வீஸ் பென்சன் வழங்கப்பட்டு இந்த நடை முறை தற்போதும் அமுலில் இருக்கிறது.

01.01.1973 க்கு முன்னர் 5 வருட சர்விசுக்கு குறைவாக இருந்து இயலாமை சதவீதமும் 20 க்கு குறைவாக இருந்தவர்களுக்கு இந்த இரண்டு வகை பென்சனும் மறுக்கப்பட்டது.  இந்த அநீதி சுமார்  53  வருடத்திற்கும் மேலாக அமுலில் இருந்தது.

இப்போதுதான் அரசு கண் விழித்து 01.01.1973  க்கு முன்னர்  5 வருடத்திற்கும் குறைவான செர்விசுடன் 20% குறைவாக இயலாமை அடைந்து வெளி வந்தவர்களுக்கு சர்வீஸ் பென்சன் வழங்கலாம் என மேற் கண்ட அரசாணை கூறுகிறது.

இந்த அரசாணையின் படி 01.01.1973  க்கு முன்னர் இயலாமை பென்சனுக்கும் சர்வீஸ் பென்சனுக்கும் அப்போதைய அரசாணையின் படி தகுதி இழந்தவர்கள் இப்போது உயிரோடிருந்தாலும் அல்லது 01.01.1973 இல் உயிரோடிருந்து பின்னர் இயலாமை சதவீதம் 20% விட குறைந்த தேதியிலிருந்து விண்ணப்பம் கொடுத்து பென்சன் பெற தகுதிடையவர் ஆவார்கள்.  ஒருவேளை அவர் இறந்து விட்டால் அவர் மனைவிக்கு குடும்ப பென்சன் கிடைக்க வகை செய்ய பட்டுள்ளது.

ஒரு ஊனமுற்ற ராணுவ வீரருக்கு  53 ஆண்டுகள் மறுத்து வந்த ஒரு பென்சன் பயனை இப்போது கொடுப்பதாக கூறும் இந்த அரசாணையின் நோக்கம் என்ன என்று தெரியவில்லை.காலம் கடந்து வெளியிடப்படும் அரசாணைகளால் பயனடயபோகும் பயனாளிகள் உயிரோடு இல்லாத பட்சத்தில் அவர் மனைவிக்கு குடும்ப பென்சன் வழங்கப்படும் என்று கூறுகிறது.  ஒருவேளை ஆவர் மனைவியும் உயிரோடு இல்லாத பட்சத்தில் தகுதியுள்ள அவர் பிள்ளைகளுக்கு இந்த பென்சன் வழங்கப்படுமா ? இந்த கேள்விக்குரிய பதில் அந்த அரசாணையில் கொடுத்திருந்தால் உண்மையில் ஒரு சிறந்த அரசாணை என்று அதை வரைந்த திருமதி மாலதி நாராயணன் அவர்களை பாராட்டலாம். 

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரத்தால் எந்த பயனும் இல்லை.  அதுபோல் காலம் கடந்த இதுபோன்ற அரசாணைகள் வெறும் கண் துடைப்புஎன்பதுதான் உண்மை. 50  ஆண்டுகளாக தனக்கு பென்சன் ஏதும் கிடையாது என்று உயிர் வாழ்ந்த ஒரு ராணுவ வீரர் தற்போது அவரிடம் ஏதேனும் உரிய ஆவணங்கள் இருந்தால் தானே பென்சனுக்கு உரிமை கோர முடியும்.  இரக்கமில்லாத இந்த நிர்வாகம் ஏன் இத்தகைய ஆணைகளை காலம் கடந்து பிறப்பித்து இவர்கள் மனதை வேதனை படுத்துகிறது?.

இந்த ஆணையை நான் பல முறை படித்து விட்டேன்.  கொடுக்கபோகும் பென்சன் பயனை எந்த தேதியில் இருந்து கொடுப்பார்கள் என்பது தெளிவாக இல்லை.  இதில் வேடிக்கை என்னவென்றால் ரெகார்ட் அலுவலகங்கள் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து தகவல் பெற்றுத்தான் நடவடிக்கை எடுக்குமாம்.

மக்களை பைத்தியமாக்கும் இந்த நிர்வாகம் என்றுதான்  சீர் படுமோ என்று தெரியவில்லை.  மாண்பிமிகு மோடி அவர்களை நம்பி நாம் மோசம் போய் விட்டோமோ என்று தோன்றுகிறது.

நாட்டைக்காத்த வீரர்களின் குடும்பங்களை நடுத்தெருவில் கையேந்த விடக்கூடாது இந்த நிர்வாகம்.  தனக்கு அதிகாரம் உள்ளது என்பதால் அர்த்தமற்ற அரசாணைகளை வெளியிடலாகாது.  இதை படிக்கும் தமிழ் தெரிந்த உயர் ராணுவ அதிகாரிகள் இதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து இந்த ஆணையை வெளியிட்ட அதிகாரிக்கு அனுப்பி பதில் பெற வேண்டும் என்பதே எமது கோரிக்கை.  செய்வார்களா ?
இதை படிப்பவர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் படி கேட்டுகொள்கிறோம்.

அருகிலுள்ள கேண்டீனிலும், ECHS பாலி கிளிநிக்கிலும் உள்ள அறவிப்பு பலகையில் இதை ஒட்டி தெரியபடுத்தினால் ஒரு சிலருக்கு பயன் கிடைக்கலாம். செய்வீர்களா ?  இந்த அறிவிப்பை facebook லும் பார்க்கலாம்.  Twitter ரிலும் பார்க்கலாம்.  எங்கள் ஊர் திருநெல்வேலி கேண்டீனிலும், ECHS கிளிநிக்கிலும் இந்த செய்தியை காணலாம்.





No comments:

Post a Comment

எமது முத்தைய பதிவுகள்

Related Posts Plugin for WordPress, Blogger...