பஞ்சாபில் முன்னாள் ராணுவத்தினர் நடத்திய |
ரயில் மறியல் போராட்டம் (படம்)
முன்னாள் ராணுவத்தினரின் அவல நிலை
நமது இந்நாள் படை வீரர்களுக்கும், முன்னாள் படைவீரர்களுக்கும் இந்த அரசு இழைத்து வரும் கொடுமைகளை இணைய தளத்திலுள்ள பல தரப்பட்ட வலைத்தளங்கள் மிக அருமையாக வெளியிட தொடங்கிவிட்டன. இது நாள் வரை இந்த அரசு நம்மை ஏமாற்றி வந்திருக்கின்றன என்பதுநன்கு புலனாகிறது. நாம் இனியும் சிவனே என்றிப்பதில் அர்த்தமில்லை.
ராணுவ தீர்பாயங்கள் (Armed Forces Tribunal) பல நூற்றுகணக்கான நல்ல தீர்ப்புக்கள் வழங்கியும் அவை அனைத்தும் அமுல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. ராணுவ அமைச்சகத்தின் அலட்சிய போக்கு இந்த தீர்ப்பாயத்தின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கி வருகிறது. ஒரு சாதாரண இயலாமை பென்சனுக்கு, ஒரு சிப்பாய் இந்த நாட்டின் உச்ச நீதி மன்றம் வரை செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக பல ஆயிரகணக்கான ஊனமுற்ற படை வீரர்கள் வாழ வழியின்றி தவிக்கின்றனர். அதே நேரத்தில் இந்த அரசு சிவிலியன் ஊழியர்களுக்கு பல சலுகைகளை வாரி வழங்குகிறது. சமீபத்தில் இந்த அநீதியைபற்றி Maj.Navdeep Singh தனது www.indianmilitary.info என்ற வலைதளத்தில் தெரிவித்துள்ள கருத்துக்களை ஒவ்வொரு முன்னாள் ராணுவ வீரனும் படிக்க வேண்டும்.
பாதுகாப்பு படையை இளமையாக வைத்திருக்கும் பொருட்டு நல்ல பல வீரர்களை நடு வயதிலேயே வீட்டுக்கு அனுப்பும் இந்த அரசு, அவர்கள் மறு பணியில் சேர்ந்து இறந்தால், அவர் மனைவிக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய குறைந்த பட்ச குடும்ப பென்ஷனை வழங்க மறுக்கிறது. இரண்டு குடும்ப பென்சன் வழங்கலாம் என்று நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள் வழங்கியும் அரசு அதை கண்டுகொள்ளாமல் ஒவ்வொருவரையும் நீதிமன்றம் செல்ல தூண்டுகிறது. நல்ல திறமையான முன்னாள் படை வீரர்களை தீவிரவாதிகளை கண்டறியும் பணிக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி அமர்த்துகின்றன. ராணுவ தீர்பாயங்களில் கூட ஊழியர்களை ஒப்பந்த அடிப்படையில் அமர்த்துவது மாபெரும் அநீதியாகும். இன்னும் எத்தனையோ அநீதிகள்.
அனைத்திற்கும் முடிவுகட்ட நாம் அனைவரும் ஒன்றுபட்டு ஒரு குடையின்கீழ் நின்று போராடவேண்டும். போராடாமல் எதுவும் கிடைக்காது. முதலில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நமது குடியை கெடுக்க கொடுக்கப்படும் இந்த மது பானத்தை வீதியில் வீசி உடைப்போம். நல்ல சங்கத்தை உருவாக்கி நல்லதோர் தலைவனை நமக்காக தேர்ந்தெடுப்போம். போராட்டங்களை அகில இந்திய அளவில் தொடங்குவோம். இதுதான் நல்ல தருணம்.
நீதி நேர்மையற்ற மனிதர்கள் நிறைந்துவிட்ட இந்த நாட்டில் நமக்கு நீதி கிடைக்க போராட்டம்தான் ஒரே வழி. ஒழுக்கம், கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நாட்டுப்பற்று என்று கூறி மக்களை ஏமாற்றுபவர்களுக்கு நாம் நல்ல பாடம் புகட்டுவோம். இந்த நாட்டை பாதுகாக்க நம்மை தவிர வேறு யாராலும் முடியாது என்பதை உணருங்கள்.
நாம் அனைவரையும் ஒன்று படுத்த நமது முன்னாள் முப்படை தளபதிகள் தயக்கமின்றி அரசியல் கட்சி அமைத்து ஆட்சியில் பங்கு கொள்ள முன்வரவேண்டும். நமது முன்னாள் ராணுவ தளபதி வீ.கே. சிங்க் அவர்கள் உடனே ஒரு அரசியல் கட்சி நமக்காக அமைக்கவேண்டும்.